சிறிலங்க அரசின் போர்நிறுத்த அறிவிப்பு: இந்தியா வரவேற்பு
வெள்ளி, 30 ஜனவரி 2009 (11:15 IST)
முல்லைத் தீவுப் பகுதியில் உள்ள தமிழர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற சிறிலங்க அரசு 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவித்துள்ளதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்றிரவு புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அயலுறவு செயலர் சிவசங்கர் மேனன், போர்நிறுத்த அறிவிப்பு காரணமாக விடுதலைப்புலிகளுக்கும், படையினருக்கும் சண்டை நடந்து வரும் பகுதியில் சிக்கியிருக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக வெளியேற முடியும் என்பதால் இதனை வரவேற்கிறோம் என்றார்.
சிறிலங்க அரசின் இந்த நடவடிக்கை எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. போர்ப் பகுதியில் இருந்து பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறி விடுவார்கள் என்று நம்புவதாகவும் மேனன் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளுக்கும், சிறிலங்கப் படையினருக்கும் கடும் சண்டை நடந்து வரும் முல்லைத் தீவுப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற ஏதுவாக 48 மணி நேர போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்க அதிபர் ராஜபக்ச நேற்றிரவு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.