பெட்ரோல், டீசல் விலைகளை மேலும் குறைக்க வேண்டும்: இடதுசாரிகள்
வியாழன், 29 ஜனவரி 2009 (20:58 IST)
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைத் அரசியல் ஆதாயத்திற்காகவே மத்திய அரசு குறைத்துள்ளது என்று குற்றம்சாற்றியுள்ள இடதுசாரிகள், விலைகளை மேலும் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா இதுகுறித்துக் கூறுகையில், "வரவிருக்கம் பொதுத் தேர்தலை மனதில் வைத்துத்தான் இந்த விலைக்குறைப்பு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக மக்களை வளைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சி இது" என்று குற்றம்சாற்றினார்.
ஒரு மாதத்திற்கு முன்னரே பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மேலும் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகும், விலை குறைப்பு அறிவிப்பை வெளியிடத் தாமதித்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
டீசல் விலையைக் குறைப்பதனால் சாதகமான விளைவுகள் ஏற்படும் என்று அரசிற்குத் தெரிந்துள்ளபோதும் வெறும் 2 ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தேசியச் செயலர் தேவராஜன் கூறுகையில், "பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை இன்னும் குறைக்க வேண்டும். பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் நட்டத்தில்தான் இயங்குகின்றன என்பதை நம்பும்படி இல்லை. எனவே, எண்ணெய் வர்த்தக நிலவரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என்றார்.