மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உள்துறை அமைச்சரானதை அடுத்து நிதித் துறை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்தது. அவருக்கு தற்போது இருதய அறுவை சிகிச்சை நடந்திருப்பதால் நிதித் துறையை தற்காலிகமாக அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கவனித்து வருகிறார்.
வருகிற நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள முடியாது என்று கருதப்படுவதால், பிரணாப் முகர்ஜி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றக் கூட்டம் பிப்ரவரி 28ஆம் தேதி முடிகிறது. மருத்துவர்கள் அனுமதித்தால் அன்று மட்டும் பிரதமர் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். மத்திய அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவடைவதால் முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய முடியாது. அடுத்து வரவிருக்கும் புதிய அரசுதான் முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய முடியும். எனவே அதற்கு முன்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.