பிரதமர் உடல் நிலையில் முன்னேற்றம்

புதன், 28 ஜனவரி 2009 (11:45 IST)
புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

அவர் குணம் அடைந்து வீடு திரும்பவே விரும்புவதாக பிரதமரின் மகள் தமன் சிங் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பிரதமருடன் அவரது மனைவி குர்சரன் சிங் கவுர் மருத்துவம்னையில் இருந்து கவனித்து வருவதாகவும், உடல் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மருத்துவர்கள் அவ்வப்போது தங்களிடம் தெரிவித்து வருவதாகவும் தமன் சிங் கூறினார்.

பெரும்பாலான நேரம் பிரதமர் ஓய்வெடுப்பதாகவும், சிறிது நேரத்திற்கு இசை கேட்டு மருத்துவமனையில் பொழுதைக் கழிப்பதாகவும் தமன் சிங் தெரிவித்தார்.

இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு மேலும் உடல் வலிமையுடன் பிரதமர் இருப்ப்தாகவும், நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் வாழ்த்து தெரிவிப்பது மகிழ்ச்சியாக உள்ளதாகவும், அவர்கள் வைத்துள்ள அன்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமரின் மகள் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்