அப்பாவி மக்களின் நலனைக் காக்கவே பயணம்: பிரணாப் முகர்ஜி
செவ்வாய், 27 ஜனவரி 2009 (16:26 IST)
இலங்கையில் நடைபெற்றுவரும் போரில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களின் நிலை இந்தியாவை கவலை கொள்ளச் செய்துள்ளது என்றும், அவர்களை காப்பாற்றுவது குறித்து பேசவே இலங்கைப் பயணம் என்றும் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் நடத்துவதாகக் கூறி சிறிலங்கப் படையினர் நடத்தி வரும் கடும் தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
முல்லைத் தீவுப் பகுதியில் அப்பாவித் தமிழர்கள் தங்கியிருந்த பாதுகாப்பு வலையத்திற்குட்பட்ட பகுதி மீது சிறிலங்க இராணுவம் நேற்று நடத்திய பிரங்கி, எரிகணைத் தாக்குதலில் 300க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலநூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமுற்றுள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கும் எல்லா வகையான பயங்கரவாதத்திற்கும் எதிராக நாம் போராடி வருகிறோம். எனவே பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் நாம் கருணை காட்ட முடியாது. குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம். அது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத இயக்கம்.
தாங்கள் விடுத்த அழைப்பை ஏற்றே பிரணாப் முகர்ஜி கொழும்பு வருகிறார் என்று சிறிலங்க அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள சிறிலங்க அயலுறவு அமைச்சகம், “எங்களது அழைப்பை ஏற்றுத்தான் இன்று பிரணாப் முகர்ஜி கொழும்பு வருகிறார். இன்று மாலை அவர் அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசவுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்க பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து வெற்றிகளை குவித்து, அவர்களின் பயங்கரவாதப் பிடியில் இருந்து மக்களை விடுவித்துவரும் நிலையில், இரு தரப்பின் நலனை கருத்தில் கொண்டு இச்சந்திப்பு நடக்கிறது” என்று கூறியுள்ளது.