முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் காலமானார்
செவ்வாய், 27 ஜனவரி 2009 (20:24 IST)
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் இன்று பிற்பகல் புதுடெல்லியில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 98.
புதுடெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த 12ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் இன்று காலை முதல் உடல்நிலை மோசமடைந்ததாகவும், பிற்பகலில் அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை டாக்டர் லெப்டினன்ட் மாத்யூ தெரிவித்தார்.
சிறுநீர்ப்பாதையில் ஏற்பட்ட கோளாறுக்காக வெங்கட்ராமன் சிகிச்சை எடுத்து வந்தார்.
ராணுவ மருத்துவமனையின் லெப்டினன்ட் ஜெனரல் மேத்யூ மேலும் கூறுகையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாள் முதல் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. என்றாலும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றார்.
ஆர். வெங்கடராமனின் பல்வேறு உறுப்புகள் செயலிழந்ததால் உயிர் காப்பு உபகரணங்கள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக அவர் தெரிவித்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனின் இயற்பெயர் ராமசாமி வெங்கட்ராமன். அனைவராலும் ஆர்.வி என அன்பாக அழைக்கப்பட்டார். 1910 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி தஞ்சை மாவட்டம் ராஜா மடத்தில் பிறந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் பட்ட மேற்படிப்பும் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பும் முடித்தார்.
பின்னர், 1935ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திலும், 1951ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கியவர், காங்கிரஸ் பேரியக்கத்தில் சேர்ந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார்.
1950 முதல் 1957 முடிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1957 முதல் 1967 முடிய தமிழகத்தில் தொழில், தொழிலாளர் நலன், கூட்டுறவு, மின்சாரம், போக்குவரத்து ஆகிய துறைகளுக்கு அமைச்சராக பணியாற்றினார். 1980இல் இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார்.
நான்கு ஆண்டுகள் நாட்டின் 7வது துணைக் குடியரசுத் தலைவராகப் பணியாற்றி, 1987 ஜுலை 25இல் இந்தியாவின் 8ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
அப்பொழுது 1989இல் வி.பி.சிங்கையும், 1991இல் சந்திரசேகரையும், அதையடுத்து ராஜிவ் காந்தியையும், பின்னர் பி.வி. நரசிம்மராவையும் பிரதமர்களாகப் பதவி அமர்த்தினார். சிறந்த தொழிற்சங்க வாதியாகவும்,சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தவர் ஆர். வெங்கட்ராமன் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் 8வது குடியரசுத் தலைவராக கடந்த 1987 ஜூலை 25ஆம் தேதி பதவியேற்ற ஆர்.வெங்கட்ராமன், 1992 ஜூலை 25ஆம் தேதி வரை அப்பதவியில் இருந்தார்.
அவர் தமது பதவிக்காலத்தில் வி.பி. சிங், சந்திர சேகர், ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் என 4 பிரதமர்களை பதவியில் அமர்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கை வரலாறு:
ஆர். வெங்கட்ராமனின் இயற்பெயர் ராமசாமி வெங்கட்ராமன். ஆர்.வி என அனைவராலும் அன்பாக அழைக்கபட்டார்.
1910ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி தஞ்சை மாவட்டம் ராஜா மடத்தில் பிறந்தவர். சென்னை பல்கலைகழகத்தில் பொருளியல் துறையில் பட்ட மேற்படிப்பும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பும் முடித்தவர்.
கடந்த 1935ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திலும், 1951ஆம் ஆண்டு டெல்லி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கியவர்.
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று, 1942ல் வெள்ளயனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டதால், 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்.
1950 முதல் 1957 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1957 முதல் 1967 முடிய தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் தொழில்துறை, தொழிலாளர் நலன், கூட்டுறவு, மின்துறை, போக்குவரத்து ஆகிய துறைகளின் அமைச்சராக பணியாற்றினார். 1980ல் இந்திராகாந்தி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார்.
4 ஆண்டுகள் நாட்டின் 7ஆவது குடியரசு துணைத் தலைவராக பணியாற்றிய பின், கடந்த 1987ஆம் ஆண்டு ஜுலை 25ஆம் தேதி நாட்டின் 8ஆவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார்.
1989ல் விபி.சிங்கையும், 1991இல் சந்திரசேகரையும், ராஜீவ் காந்தி, அதன் பின் பி.வி நரசிம்மராவையும் பிரதமர்களாக பதவி அமர்த்தியவர்.
ஆர். வெங்கட்ராமன் மிகச் சிறந்த தொழிற்சங்கவாதியாகவும், சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தவர்.