60வது குடியரசு தினவிழா: பிரதீபா தேசிய கொடியேற்றினார்

திங்கள், 26 ஜனவரி 2009 (16:33 IST)
நாட்டின் 60வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

தலைநகர் புதுடெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டீல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் கஜகஸ்தான் அதிபர் நூர் சுல்தான் நாஸர்பயேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

PTI
















அணிவகுப்பு துவங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர்ஜவான் ஜோதி நினைவிடத்தில், ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி மற்றும் முப்படைத் தளபதிகள், வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் குடியரசு தினவிழாவுக்கு வந்த அமைச்சர் அந்தோணி, குடியரசுத் தலைவர் பிரதீபா, கஜகஸ்தான் அதிபரை மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார். இதன்பின்னர் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது 21 துப்பாக்கி குண்டுகள் முழக்கப்பட்டன.

குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ராஜ்பத் பகுதியில் இருந்து குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட்டனர்.

அணிவகுப்பில் நாட்டின் முப்படை வீரர்களும் இடம்பெற்றனர். இந்திய ராணுவத்தின் வலிமையை பறை சாற்றும் வகையில் டி-90 பீரங்கிகள், பிரமோஸ் ஏவுகணை, அதிநவீன ரேடார் கருவிகள், கவச வாகனங்களும் அணி வகுத்து வந்தன.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது போல் மீண்டும் தாக்குதல் நடக்காமல் இருக்க டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குடியரசு தின விழா நடக்கும் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

ஹெலிகாப்டர்களில் பறந்த படியும், உயரமான கட்டிங்களில் நின்ற படியும் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தாலும், 3 வார காலத்திற்கு ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், பிரதமர் மன்மோகன் சிங் குடியரசு தின விழாவில் பங்கேற்கவில்லை. அவரது பணிகளை அமைச்சர் ஏ.கே.அந்தோணி நிறைவேற்றினார்.