இந்தியாவிற்கு யுரேனியம்! கசகஸ்தானுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது
சனி, 24 ஜனவரி 2009 (16:20 IST)
இந்தியாவின் அணு மின் உலைகளுக்குத் தேவையான யுரேனியத்தை அளிப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் கசகஸ்தானும் கையெழுத்திட்டுள்ளன.
உலகில் மிக அதிக அளவிற்கு யுரேனிய இருப்பு கொண்ட நாடு கசகஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கு யுரேனியம் அளிக்க ஆஸ்ட்ரேலியா மறுத்துவிட்டதை அடுத்து கசகஸ்தானிடமிருந்து பெறுவதற்கு இந்தியா முயற்சித்து வந்தது.
இந்த நிலையில், இந்தியா வந்துள்ள கசகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நஜர்பயீவ், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் யுரேனியம் வழங்கலிற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் இந்திய அணு சக்தி கழகத்தின் தலைவர் எஸ்.கே. ஜெயினும், கசகஸ்தான் நாட்டின் காஸ்ஆட்டோம்புரோம் நிறுவனத்தின் தலைவர் முக்தார் ஜாகிஷேவ்வும் கையெழுத்திட்டனர். யுரேனியம் வழங்கல் மட்டுமின்றி, யுரேனிய இருப்பை கண்டறிந்து எடுப்பதற்கான தொழில்நுட்ப கூட்டுறவு ஒப்பந்தத்திலும், கசகஸ்தானில் அணு உலைகளை இந்தியா அமைத்துத் தருவதற்கான ஒப்பந்தத்திலும் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
இவைகள் மட்டுமின்றி, இருநாடுகளும் இணைந்து விண் ஆய்வை மேற்கொள்ளவும், இயற்கை வாயுவை இந்தியாவிற்கு வழங்கவும் தனித்தனி ஒப்பந்தங்கள் கையெழுதாகியுள்ளன.
இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளின் வளர்ச்சிக்கு மிக அவசியமானவை என்று நூர்சுல்தான் நஜர்பயீவ் கூறினார்.