மும்பை தாக்குதலில் உயிரிழந்த 6 அதிகாரிகளுக்கு அசோக சக்ரா விருது
வெள்ளி, 23 ஜனவரி 2009 (13:27 IST)
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலின் போது உயிர் நீத்த 6 காவல்துறை அதிகாரிகள் உட்பட 11 பேருக்கு வீர தீர செயல்களுக்கான அசோக சக்ரா விருது குடியரசு தினத்தன்று வழங்கப்படுகிறது.
இதன்படி மும்பை தாக்குதலில் உயிரிழந்த மும்பை காவல்துறை அதிகாரிகள் அசோக் காம்தே, விஜய் சலஸ்கார், மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கார்கரே, துணை ஆய்வாளர் துக்காராம், தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மேஜர் சந்தீப் உன்னி கிருஷ்ணன், ஹவில்தார் கஜேந்தர் சிங் ஆகியோருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்படுகிறது.
இவர்களைத் தவிர ஜம்மு-காஷ்மீரீல் பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் உயிரிழந்த கர்னல் ஜோஜன் தோமஸ், ஹவில்தார் பஹ்தூர் சிங் ஆகியோரும், ஜாமீயா நகர் பகுதியில் இந்திய முஜாகிதீன் பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் உயிரிழந்த டெல்லி காவல்துறை ஆய்வாளர் எம்.சி.ஷர்மா, மேகாலய காவல்துறை அதிகாரி ஆர்.பி.தியங்டோஹ், ஒரிஸா காவல்துறையைச் சேர்ந்த பிரமோத் குமார் சத்பதி ஆகியோரது பெயர்களும் அசோக சக்ரா விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இவர்களுக்கு விருது வழங்குவதற்கான உத்தரவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நேற்று கையெழுத்திட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 25ஆம் தேதி வெளியிடப்படுகிறது.