மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாற்றப்பட்டவர்கள் மீது மராட்டிய மாநில அமைப்பு ரீதியிலான குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் (MCOCA) கீழ் வழக்கு தொடர்வது பொருந்தும் என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மராட்டிய மாநிலம் மாலேகானில் கடந்த ஆண்டு 7 பேரை பலிகொண்ட குண்டு வெடிப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இந்துத் துறவி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக கடந்த 20ஆம் தேதி குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.
மும்பையில் உள்ள மராட்டிய மாநில அமைப்பு ரீதியிலான குற்றங்கள் தடுப்பு (MCOCA) சிறப்பு நீதிமன்றத்தில் 4,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அம்மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு தாக்கல் செய்த்து.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாற்றப்பட்டவர்கள் மீது மராட்டிய மாநில அமைப்பு ரீதியிலான குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வது பொருந்துமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று குற்றம் சாற்றப்பட்டவர்கள் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர்கள் மகேஷ் ஜேத்மலானியும், ஸ்ரீகாந்த் ஷிவாடேயும் கோரினர்.
இதனை எதிர்த்த அரசு வழக்கறிஞர் ரோஹினி சாலியன், அச்சட்டம் சரியாகவே இவ்வழக்கிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வாதிட்டார்.