ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசியல் நிலையற்ற நிலைமையைக் கருத்தில் கொண்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்திருக்கிறது.
81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் செயல்பாடுகளை தற்காலிகமாக முடக்கி வைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக புதுடெல்லியில் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தமர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜேஎம்எம் கட்சித் தலைவர் சிபுசோரன் தோல்வியடைந்தார். இதையடுத்து கூட்டணிக் கட்சிகளின் நெருக்குதலால், முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.
இதையடுத்து புதிய முதல்வரைத் தேர்வு செய்வதில் கடும் குழப்பம் ஏற்பட்டது.
தமது ஆதரவாளர் ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்களிடம் சிபுசோரன் வலியுறுத்தினார்.
இதனை ராஷ்டிரிய ஜனதா தளம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வந்தது.
இதற்காக இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவையின் கூட்டம் கூடியது. மாநில முதல்வர் சையது சிப்தே ரஸி மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைப்பது என்று மத்திய அரசு முடிவு செய்தது.
இதனிடையே இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு பரிந்துரை செய்வது என்று முடிவு செய்யப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.