இலங்கைப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு : இந்தியா வலியுறுத்தல்
ஞாயிறு, 18 ஜனவரி 2009 (16:48 IST)
தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துச் சமூகத்தினரும் அமைதியாக வாழும் வகையில், நீண்ட காலமாக நடந்து வரும் இனப் பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வை அமைதிப் பேச்சின் மூலம் காண்பதற்கு சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்காவில் தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின் போது, அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசிய இந்திய அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன், இலங்கையின் வடக்குப் பகுதிக்காகச் சிறிலங்கா அரசு உருவாக்கியுள்ள அதிகாரப்பகிர்வுத் திட்டத்தை வரவேற்றார்.
சிவசங்கர் மேனன் தனது பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவிற்குத் திரும்பியுள்ள நிலையில், கொழும்புவில் உள்ள சிறிலங்காவிற்கான இந்தியத் தூதரகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "இலங்கையில், வடக்கு உள்ளிட்ட இனப்பிரச்சனை நீடித்து வரும் பகுதிகளில் ஒரு அரசியல் தீர்வை அமைதிப் பேச்சின் மூலம் காண்பதற்கு சிறிலங்கா அரசு முயற்சிக்க வேண்டும் என்று மேனன் வலியுறுத்தியுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், "ஒன்றுபட்ட இலங்கை என்பதற்கு உட்பட்ட அரசியல் புரிந்துணர்வின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய சிவசங்கர் மேனன், தமிழர்கள் உள்பட அனைத்துச் சமூகத்தினரும் அமைதியாகவும் மாண்புடனும் வாழும் வகையில் அரசியல் தீர்வு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பிரித்தளிப்பதற்கான 13ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு சிறிலங்கா அரசு உறுதியாக உள்ளதையும் சிவசங்கர் மேனன் வரவேற்றார்.
அதற்கு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியில் இருந்து, இலங்கை இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வைக் காணத் தனது அரசு மிகவிரைவாக நடவடிக்கை எடுக்கும் என்று சிறிலங்க அதிபர் ராஜபக்ச குறிப்பிட்டுக் காட்டினார்" என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.