அணு ஆயுத சோதனை தடையில் கையெழுத்திட மாட்டோம்: பிரணாப்

சனி, 17 ஜனவரி 2009 (17:34 IST)
அணு ஆயுத சோதனைத் தடை (சிடிபிடி) ஒப்பந்தத்திலோ அல்லது அணு ஆயுத பரவல் தடுப்பு (என்பிடி) ஒப்பந்தத்திலோ எந்தக் காரணத்திற்காகவும் இந்தியா கையெழுத்திடாது என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதனை வலிமையாக உறுதிப்படுத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, “இந்தியாவின் அயலுறவுக் கொள்கை என்பது அதன் தேச நலனை அடிப்படையாகக் கொண்டது. எனவே, அதன் தேச முன்னுரிமையே அயலுறவுக் கொள்கையை தீர்மானிக்கிறது” என்று கூறியுள்ளார்.

என்பிடி-யிலும், சிடிபிடி-யிலும் இந்தியாவை கையெழுத்திட முயற்சிப்போம் என்று அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள பராக் ஒபாமா கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒரு இரு தரப்பு ஒப்பந்தம் மட்டுமே. அது தவிர, பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் இந்தியா ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இவைகளைத் தாண்டி வேறு எதுவும் இந்தியாவை கட்டுப்படுத்தாது என்று பிரணாப் கூறியுள்ளார்.

பயங்கரவாத அச்சுறுத்தலை ஒடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் வாயிலாக பாகிஸ்தானிற்கு நெருக்கடி கொடுப்பீர்களா என்று கேட்டதற்கு, இந்தியாவின் அயலுறவுக் கொள்கை சுதந்திராமானது, மற்ற நாடுகளின் வழியை அது பின்பற்றாது என்று கூறியுள்ள பிரணாப், பயங்கரவாதப் பிரச்சனையை ஒவ்வொரு நாடும் சரியாக கையாள வேண்டும், இப்பிரச்சனையில் அனைத்து நாடுகளும் பாகிஸ்தானிற்கு நெருக்குதலை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாகவும் பதிலளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்