அயல்நாடுவாழ் இந்தியருக்கு மூன்று புதிய பல்கலைக்கழகங்கள் : ஜி. கே. வாசன்
சனி, 10 ஜனவரி 2009 (13:32 IST)
அயல்நாடுவாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவழியினரின் குழந்தைகள் படிப்பதற்காக மூன்று புதிய பல்கலைக்கழகங்களை மத்திய அரசு அமைக்கவிருப்பதாக மத்திய புள்ளியியல் இணையமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்துவரும் அயல்நாடுவாழ் இந்தியர் மாநாட்டில், கரீபியன் பிராந்தியம் தொடர்பான அமர்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது:
அயல்நாடுவாழ் இந்தியர்களின் குழந்தைகளுக்கான முதல் பல்கலைக்கழகம் பெங்களூருவில் அமைக்கப்படவுள்ளது. இது வரும் 2010ஆம் ஆண்டில் செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகங்களில் 50விழுக்காடு இடங்கள் இந்திய வம்சாவழியினர் மற்றும் அயல்நாடுவாழ் இந்தியர்களின் குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும்.
பொருளாதார நிலையில் தாழ்ந்துள்ள அயல்நாடுவாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவழியினரின் குழந்தைகளின் உயர் கல்விக்கான உதவித் தொகையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
வளர்ச்சி திட்டங்களுக்காக அயல்நாடுவாழ் இந்தியர்கள் அளிக்கும் நன்கொடைகளை சீரமைப்பதற்காக மத்திய அரசு இந்திய மேம்பாட்டு அமைப்பை நிறுவியுள்ளது. வளர்ச்சிப் பணிகளுக்காக நிதி அளிக்க விரும்பும் அயல்நாடுவாழ் இந்தியர் இந்த அமைப்பிற்கு பணம் அனுப்பலாம்.
நீண்டகாலமாக அயல்நாடுவாழ் இந்தியர்கள் இரட்டை குடியுரிமையை பெற கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்திய அரசு இதனை ஏற்று, அயல்நாடுவாழ் இந்தியர் குடியுரிமை திட்டத்தைத் துவக்கியுள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கு வாழ்நாள் முழுவதும் விசா இல்லாமல் பயணிக்கும் வசதி, பொருளாதார, கல்வி, கலாச்சார பலன்களை அயல்நாடுவாழ் இந்தியர்கள் பெறலாம்.
2001 முதல் 2007 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், அயல்நாடுவாழ் இந்தியர்கள் மூலம் நமது நாட்டுக்கு வந்த அந்நியச் செலாவணி 13 பில்லியன் டாலரிலிருந்து 30 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.