சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடைபெற்ற நிதி முறைகேடுகளை ஒப்புக்கொண்டு, தலைவர் பதவியிலிருந்து விலகிய பி. ராமலிங்க ராஜூவும், அவரது சகோதரர் ராமராஜூவும் ஹைதராபாத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
ராமராஜூ சத்யம் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து வந்தார். ஆந்திர மாநில போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் மும்பை பங்குப் பரிவர்த்தனைக் கழக (செபி) அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தவுள்ளனர்.
webdunia photo
FILE
ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து பி. ராமலிங்க ராஜு புதன்கிழமையன்று விலகினார். அந்த நிறுவனத்தில் 7 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு நிதி முறைகேடுகள் நடந்திருப்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
அவரது சகோதரரும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ராமராஜுவும் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து அந்த நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. அந்த நிறுவனம் தொடர்ந்து செயல்படுவதில் கடும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆந்திர அரசும், மத்திய அரசும் முடிவு செய்தன.
இதைத் தொடர்ந்து முதல்கட்டமாக சத்யம் கம்ப்யூட்டர் விவகாரம் குறித்து இந்திய பங்குப் பரிவர்த்தனைக் கழகம் (செபி) மூலம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.
செபி விசாரணைக் குழு முன் ராமலிங்க ராஜுவின் வழக்கறிஞர் நேற்று ஆஜரானார். தேவைப்பட்டால் குழுவினர் முன் ராஜுவும் ஆஜராகி தகவல்களை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஹைதராபாதில் ராஜு தங்கியிருப்பதாகவும் தேவைப்பட்டால் குழுவினர் முன் ஆஜராகி தகவல்களை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராமராஜு இருவரையும் போலீஸôர் திடீரென கைது செய்தனர்.
நிதி மோசடி, சதி, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று ஆந்திர காவல்துறை தலைவர் எஸ்.எஸ்.பி. யாதவ் தெரிவித்தார்.
சத்யம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வல்தாமணி ஸ்ரீனிவாசன் சனிக்கிழமை கைது செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார்.