பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு

திங்கள், 28 டிசம்பர் 2009 (15:21 IST)
அடுத்த 2 முதல் 3 வாரத்திற்குள் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்குள் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

விலைக் குறைப்பு எந்த அளவு இருக்கும் எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதுபற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அமைச்சர் தியோரா பதிலளித்தார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்ததால், கடந்த டிசம்பர் 5ஆம் தேதி பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது குறிப்பிடத்தக்கது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறையுமா?: இதற்கிடையில், கச்சா எண்ணெய் விலை சரிவால் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலையை ரூ.20 முதல் ரூ.25 வரை குறைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்