கருந்துளைகளை ஆய்வு செய்ய சிறப்புச் செயற்கைக்கோள் : இந்தியா திட்டம்!
புதன், 7 ஜனவரி 2009 (14:00 IST)
கருந்துளைகளையும், தொலை தூரத்தில் உள்ள பால்வெளி மண்டலங்களையும் ஆராய்வதற்காகத் தனிச்சிறப்பான அதிநவீனக் கருவிகள் கொண்ட செயற்கைக்கோள் ஒன்றை இந்த ஆண்டு இறுதியில் விண்ணில் செலுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
அஸ்ட்ரோசாட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயற்கைக்கோள், வானியல் ஆய்விற்கென்றே அர்ப்பணிக்கப்பட்டும் நமது நாட்டின் முதல் செயற்கைக்கோள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபஞ்ச ஆராய்ச்சியில் இந்தியாவிற்கென்று சிறப்பான ஒரு இடத்தை இந்த அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் பெற்றுத்தரும் என்று வானியல் அறிஞர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
ஷில்லாங்கில் நடந்து வரம் 96ஆவது இந்திய அறிவியல் மாநாட்டின் இடையே பி.டி.ஐ. நிறுவனத்திடம் பேசியுள்ள, வானியல் மற்றும் வான்கோளவியல் ஆராய்ச்சிக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மையத்தின் மூத்த வான்கோளவியல் அறிஞர் தீபங்கர் பட்டாச்சார்யா, "இதுவரை இல்லாத அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புறஊதாக் கதிர் தொலைநோக்கியுடன் அஸ்ட்ரோசாட் பறக்கப் போகிறது" என்றார்.
வானியல் மற்றும் வான்கோளவியல் ஆராய்ச்சிக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மையம் தவிர, டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம், இந்திய வான்கோளவியல் ஆய்வு மையம், ராமன் ஆராய்ச்சி மையம் மற்றும் இயற்பியல் ஆய்வு மையம் ஆகிய இந்தியாவின் முன்னணி அறிவியல் ஆய்வு மையங்கள் அஸ்ட்ரோசாட் திட்டத்தில் பங்கேற்றுள்ளன.