தேசியப் புலனாய்வு முகமை : முதல்வர்களுடன் சிதம்பரம் ஆலோசனை!
புதன், 7 ஜனவரி 2009 (13:39 IST)
பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக அமைக்கப்படவுள்ள தேசியப் புலனாய்வு முகமை குறித்து மாநில முதல்வர்களிடம் ஆலோசனை கேட்டுள்ள உள்துறை அமைச்சர் சிதம்பரம், தேவைப்பட்டால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படும் என்று உறுதியளித்தார்.
பயங்கரவாதத்தை முறியடிக்க தேசியப் புலனாய்வு முகமை ஒன்றை அமைக்க வகை செய்யும் சட்டம், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் ஆகியவை குறித்து தலைநகர் டெல்லியில் நடந்து வரும் முதல்வர்கள் மாநாட்டில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் விளக்கிக் கூறினார்.
அப்போது சில மாநிலங்களின் முதல்வர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று சிதம்பரம் உறுதியளித்தார்.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், "அதிருப்தி தெரிவித்துள்ள முதல்வர்களுக்கு தேசியப் புலனாய்வு முகமை குறித்து நான் விளக்கமளிக்கப் போகிறேன், மேலும் அவர்களின் ஆலோசனையைப் பெறுவேன். தேவைப்படின் வேண்டிய மாற்றங்களுடன் இச்சட்டம் மீண்டும் அறிமுகம் செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
தேசியப் புலனாய்வு முகமை குறித்து 6 மாநிலங்களின் முதல்வர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ள அவர், தேசியப் புலனாய்வு முகமைச் சட்ட விதிகள் குறித்து விரிவாக விளக்கித் தானே குறிப்பிட்ட முதல்வர்களுக்கு அடுத்த சில நாட்களில் கடிதம் எழுதப்போவதாகத் தெரிவித்தார்.
மேலும், தேசியப் புலனாய்வு முகமைச் சட்டம் குறித்து எல்லா மாநில முதல்வர்களிடமும் ஆலோசனைகள் கேட்கப்பட்டுள்ளன. அவர்கள் அளிக்கும் ஆலோசனையின் அடிப்படையில், தேவைப்பட்டால் சில மாற்றங்களுடன் இச்சட்டம் மீண்டும் பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்படும் என்றார் சிதம்பரம்.
தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தில் எந்த இடத்திலும் மாநில அரசுகளின் அதிகாரங்கள் மீறப்படவில்லை என்றும் அவர் கூறினார்.