வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் லாரிகள் பறிமுதல் செய்யப்படும் : அரசு எச்சரிக்கை
செவ்வாய், 6 ஜனவரி 2009 (19:48 IST)
வேலை நிறுத்தத்தில் தொடர்ந்து ஈடுபடும் லாரிகளைப் பறிமுதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் லாரிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு நேற்று எச்சரிக்கை விடுத்தது.
ஆனால் மத்திய அரசின் எச்சரிக்கையையும் மீறி லாரிகள் வேலை நிறுத்தம் இன்று மேலும் தீவிரமடைந்தது. டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தத்தைக் கைவிட மாட்டோம் என்று லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தத்தால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்துள்ள நிலையில், மத்திய அரசின் போக்குவரத்து செயலர் பிரம்மா தத் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டப்படி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரிகளை பறிமுதல் செய்து வேறு டிரைவரை வைத்து இயக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. தேவைப்பட்டால், லாரிகள் பறிமுதல் செய்யப்படும்.
மேலும், போக்குவரத்து சேவைக்கு தனியார் வாகனங்களை அனுமதிக்குமாறும், பொருட்களை கொண்டு செல்வதற்கு விதிமுறைகளை தளர்த்துமாறும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
லாரிகள் வேலை நிறுத்தத்தால், சில மாநிலங்களைத் தவிர பிற இடங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. 40 விழுக்காடு லாரிகள் மட்டுமே ஓடவில்லை. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற தென்மாநிலங்களில் மட்டுமே பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
லாரிகள் வேலை நிறுத்தத்தை சமாளிக்க அவசரகால நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை இரயில் மூலம் கொண்டு செல்வோம். இப்பொருட்களை முன்னுரிமை அளித்து கொண்டு செல்ல இரயில்வே உறுதி அளித்துள்ளது.