பாகிஸ்தான் ஆதரவுடனேயே மும்பைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது: பிரதமர் குற்றச்சாற்று
செவ்வாய், 6 ஜனவரி 2009 (12:56 IST)
மும்பையின் மீது ஒரு இராணுவ நடவடிக்கையைப் போல துல்லியமாக திட்டமிட்டு நடத்தபட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதலே அது பாகிஸ்தான் ஆதரவுடன்தான் நடத்தப்பட்டுள்ளது என்பதற்குச் சான்றாகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் தற்பொழுது நடைபெற்றுவரும் தேச பாதுகாப்பு குறித்து ஆராயும் முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவிற்கு வரும் அயல் நாட்டவரை அச்சுறுத்தித் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடனேயே மும்பை மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
“இந்த தாக்குதல் நடத்தப்பட்ட விதமும், பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும், அதி நவீன கருவிகளும், கராச்சியில் இருந்து கடல் வழியாக நாட்டிற்குள் நுழைந்து ஒரு இராணுவ நடவடிக்கை போல இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதே, இது பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் நடத்தப்பட்டதுதான் என்பதற்கு சான்றாகிறது” என்று கூறிய பிரதமர், இத்தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானில் இருந்து இயங்கிவரும் லஸ்கர் ஈ தயீபா இயக்கம்தான் என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது என்று கூறினார்.
“நமது அமைப்பில் உள்ள பலவீனத்தைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் முயற்சி நடந்துவருகிறது. நமது நாட்டின் அண்டை நாடுகளில் நிலவும் நிச்சயமற்ற பாதுகாப்புச் சூழல், பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகிறது. இப்பட்டிப்பட்ட பாதுகாப்புச் சூழலில் அரசு உறுதியாக இருக்கவேண்டும், இல்லையென்றால் என்ன நடக்கும் என்பதற்கு பாகிஸ்தான் உதாரணமாகும்” என்று கூறினார்.
பிரச்சனையை நேரடியாக அணுகுவதை தவிர்த்துவிட்டு, போர் வெறியை கிளப்புகிறது பாகிஸ்தான் என்று கூறிய பிரதமர், பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டுமெனில் அதனை முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று கூறினார்.
தற்பொழுது நிலவும் பாதுகாப்புச் சூழல் மிகவும் சவாலானது என்றாலும், அது நமது சமாளிக்கும் திறனைத் தாண்டியது இல்லை என்று கூறிய மன்மோகன் சிங், பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வலிமையான தேச அமைப்பு அவசியமானது என்று கூறினார்.
பயங்கரவாதத்தை ஒடுக்க நமது புலனாய்வு அமைப்புகளை பலப்படுத்துவது மட்டுமின்றி, நவீன் பயிற்சிகள், கருவிகள் ஆகியவற்றுடன், மத்திய மாநில அமைப்புகளுக்கிடையே நெருக்கமான ஒத்துழைப்பு ஏற்படுத்ததப்பட வேண்டும் என்று கூறினார்.
இம்மாநாட்டில் தமிழக முதலமைச்சர் சார்பில் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டுள்ளார்.