கச்சத் தீவை மீட்க வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதி தாக்கீது
செவ்வாய், 6 ஜனவரி 2009 (12:33 IST)
இந்தியாவிற்கு சொந்தமாக இருந்த கச்சத் தீ்வை சிறிலங்காவிற்கு தாரை வார்த்தது அரசமைப்புச் சட்டப்படி தவறானது என்றும், அதனை மீட்க உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய, மாநில அரசுகள் விளக்கமளிக்கக் கோரி உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலருமான ஜெயலலிதா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜூ, பி. சதாசிவம் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில் அ.இ.அ.தி.மு.க. சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கிரு. கிருஷ்ணமூர்த்தி, 1974ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறிலங்காவிற்கு கச்சத் தீவு வழங்கப்பட்டுவிட்டதால், அங்கு நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை பறிபோய் விட்டது என்று கூறினார்.
ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நமது நாட்டின் ஒரு பகுதியை வேறொரு நாட்டிற்கு வழங்குவதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்றும், எனவே இந்தியா-சிறிலங்க அரசுகளுக்கு இடையே கையெழுத்தான அந்த ஒப்பந்தம் சட்டத்திற்குப் புறம்பானது என்றும் வாதிட்ட வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
இதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் விளக்கமளிக்குமாறு தாக்கீது அனுப்ப நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.