நீதிபதிகள் சம்பளத்தை உயர்த்த அவசரச் சட்டம்: மத்திய அரசு முடிவு

வெள்ளி, 2 ஜனவரி 2009 (18:35 IST)
நாட்டின் தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை மத்திய அரசு பிறப்பிக்க உள்ளதாக அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

தலைநக‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று நடந்தது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அ‌றி‌விய‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப அமை‌ச்ச‌ர் க‌பி‌ல் ‌சிப‌ல், நாட்டின் தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார்.

இந்த அவசரச் சட்டத்தின்படி, நாட்டின் தலைமை நீதிபதியின் சம்பளம் மாதம் ரூ.ஒரு லட்சமாகவும், இதர உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ.90 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.

இதேபோல் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் சம்பளம் ரூ.90 ஆயிரமாகவும், இதர உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ.80 ஆயிரமாகவும் உயர்த்தப்படும் என கபில் சிபல் தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற நீதிபதிகளின் ஓய்வூதியமும் மாற்றியமைக்கப்பட உள்ளதாக கபில் சிபல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்