அறிவுரை கூறப் பாகிஸ்தானிற்கு அருகதை இல்லை: இந்தியா
வெள்ளி, 2 ஜனவரி 2009 (16:05 IST)
தனது மண்ணில் இன்னும் 330க்கும் மேற்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டுவரும் நிலையில், எல்லையில் படை நடவடிக்கைகளை கைவிடுமாறு இந்தியாவிற்கு அறிவுரை கூறப் பாகிஸ்தானிற்கு அருகதை இல்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறியுள்ளார்.
இந்தியா தரப்பில் பதற்றம் அதிகரிக்கப்படவில்லை என்றும், ஆயுதப் படைகள் தனது வழக்கமான கடமைகளைத்தான் செய்கிறார்கள் என்றும் மீண்டும் கூறிய அவர், பாகிஸ்தான் தரப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் வரும் வரையில் நமது படையினர் எச்சரிக்கையுடன் இருப்பர் என்றார்.
புது டெல்லியில் இன்று பாதுகாப்பு அமைச்சகத்தின் நிகழ்ச்சி ஒன்றின் இடையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அந்தோணி கூறியதாவது:
பாகிஸ்தானின் போக்கில் இதுவரை குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை. அறிக்கைகள் முக்கியமல்ல; நடவடிக்கைதான் முக்கியம். அதுதான் அவர்களின் போக்கை நிரூபிக்கும்.
பாகிஸ்தானின் மண்ணில் இன்னும் 330க்கும் மேற்பட்ட பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வரும் நிலையில், எல்லைப் பகுதிகளில் படை நடவடிக்கைகளைக் கைவிடுமாறு இந்தியாவிற்கு அறிவுரை கூற அந்நாட்டு அரசிற்கு எந்த அருகதையும் இல்லை.
நமது ஆயுதப் படையினர் அவர்களின் கடமைகளைச் செய்கிறார்கள். அவர்கள் எதையும் அதிகரிக்கவில்லை. பதற்றத்தை அதிகரிக்கும் எந்தச் செயலிலும் அவர்கள் ஈடுபடவில்லை. அதேநேரத்தில், அச்சுறுத்தல் எங்கிருந்து வந்தாலும் அதைச் சமாளிக்க அவர்கள் தயாராக உள்ளனர்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, அதுபோன்ற எந்தச் சூழலையும் எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டியது அவசியம். அது நமது கடமையும் ஆகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.