மாலத்தீவில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற முதலாவது ஜனநாயகத் தேர்தலில் மவுமூன் அப்துல் கயூமை பதவியில் இருந்து நீக்கி வெற்றிபெற்ற, முகமது அன்னி நஷீத் 3 நாள் பயணமாக புதுடெல்லி வந்துள்ளார்.
இந்தியா - மாலத்தீவு இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.
மாலத்தீவில் கடந்த 30 ஆண்டுகளாக ஒரே கட்சி ஆட்சி செய்து வந்த நிலையில், கடந்த தேர்தலில் நீண்டகாலம் அதிபராக இருந்த கயூமை தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தார் நஷீத்.
பிரதமர் தவிர குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோரையும் நஷீத் சந்தித்து ஆலோசனை நடத்துவார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், நஷீத்திற்கு விருந்து அளித்து கவுரவிப்பார். அப்போது குடியரசுத் தலைவரையும் அவர் சந்தித்துப் பேச்சுகள் நடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலத்தீவில் புதிதாக அமைந்துள்ள அரசுக்கு ஆதரவளிக்கும் வகையில், 100 மில்லியன் டாலரை இந்தியா கடனாக வழங்க உள்ளது.
மாலத்தீவு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவும் அதிபருடன் இந்தியா வந்துள்ளது.