பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான மும்பையில் தாஜ், டிரிடன்ட் ஓட்டல்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
மும்பையில் கடந்த மாதம் 26ஆம் தேதி அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகள் மும்பையில் உள்ள தாஜ், டிரிடன்ட் ஓட்டல்களுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து தாக்குதல் நடத்தினர். 60 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களில் இந்த இரு ஓட்டல்களும் கடுமையாக சேதமடைந்தன.
இதையடுத்து கடந்த 3 வாரங்களாக மூடப்பட்டிருந்த இந்த இரு ஓட்டல்களும் வாடிக்கையாளர்களுக்கு இன்று திறக்கப்பட்டது.
மும்பையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய 21 மாடிகளில் 1000 அறைகள் கொண்ட தாஜ் ஓட்டல் இன்று திறக்கப்பட்டது. தாஜ் ஓட்டலில் முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்கள் இன்று ஓட்டலுக்கு வந்திருந்தனர். அவர்களை ஓட்டல் ஊழியர்களும், பணிப்பெண்களும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதேபோல், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய டிரிடன்ட் ஓட்டல் மட்டும் திறக்கப்பட்டு உள்ளது. அதனுடன் இணைந்த ஓபராய் ஓட்டல் இன்னும் சில மாதங்கள் கழித்து திறக்கப்படும் என்று நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மும்பை ஓட்டல்கள் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து ஓட்டலைச் சுற்றிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புக்காக ஓட்டல் நிர்வாகமும் தனியாக பாதுகாப்பு வீரர்களை நியமித்துள்ளது.