ஆள் பற்றாக்குறை:மால்டாவில் பறவைக்காய்ச்சல் கோழிகளைக் கொல்வதில் பாதிப்பு
வியாழன், 18 டிசம்பர் 2008 (17:24 IST)
பறவைக்காய்ச்சல் அபாயத்தால் கோழிகள் கொல்லப்பட்டு வரும் வேளையில், மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் ஆள், நிதிப் பற்றாக்குறை காரணமாக கோழிகள் கொல்லப்படுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பறவைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நர்ஹட்டா, டிரைபஜனி, சந்திபூர், சத்கேரியா, பார்கல் கிராமங்களில் 3-வது நாளாக இன்றும் தொடர்ந்து கோழிகளை கொல்லும் பணி நடைபெற்றது.
இந்த வார இறுதிக்குள் 10,000 கோழிகளை கொல்ல மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. ஆனால் இதுவரை 2,000 கோழிகளே கொல்லப்பட்டுள்ளதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.
கசிபுர் கிராமத்தில் கோழிகளை கொல்வதற்கு பணம் எதுவும் கொடுக்காமல் சிறுவர்களையும் அதிகாரிகள் ஈடுபடுத்தி வருவதாக அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, கோழிகளை கொல்லுவதில் நிர்வாகம் மிகவும் மெதுவாக செயல்படுவதாகவும், இதனால் கசிபுர் கிராமத்தில் சுமார் 12க்கும் மேற்பட்டவர்களுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் குற்றம் சாற்றியுள்ளனர்.
இதுகுறித்து கூடுதல் மாவட்ட நீதிபதி புர்ன சந்திரஷிட் தெரிவிக்கையில், ஆள், நிதிப் பற்றாக்குறை காரணமாக கோழிகளை கொல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் குறிப்பிட்ட காலத்துக்குள் கோழிகள் கொல்லப்பட்டு விடும் என்றார்.