கார்கரே கொலையில் மர்மம்: மத்திய அமைச்சர் அந்துலே!
புதன், 17 டிசம்பர் 2008 (20:59 IST)
மும்பை மீது தாக்குதல்கள் நடந்தபோது மராட்டிய பயங்கரவாத தடுப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கார்கரேவைக் கொன்றது யார் என்பதில் சந்தேகம் உள்ளதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் ஏ.ஆர். அந்துலே கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அந்துலே, "கார்கரே பயங்கரவாதத்திற்குப் பலியானாரா? அல்லது வேறு காரணத்திற்கா என்று எனக்குத் தெரியவில்லை." என்றார்.
மேலும், "கார்கரே ஒரு துணிச்சலான அதிகாரி. இந்த நாட்டிற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்ய அவர் தயாராக இருந்தார். மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இஸ்லாமியர்கள் அல்லாத சிலருக்கும் தொடர்பு உள்ளது என்ற உண்மையை அவர் வெளிக்கொண்டு வந்தார்.
இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்த பெண் துறவி சாத்வி பிரக்யா சிங் தாகூர், இராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் புரோஹித் ஆகியோர் உள்ளிட்ட பலரை அவர் கைது செய்தார்.
மும்பையில் தாஜ் நட்சத்திர விடுதி, ஒபராய் நட்சத்திர விடுதி, நாரிமேன் குடியிருப்பு ஆகிய பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்த இடங்களுக்குச் செல்லாமல், சம்பந்தமில்லாத இடத்திற்கு (காமா மருத்துவமனைக்கு அருகே அவர் கொல்லப்பட்ட இடம்) அவர் ஏன் சென்றார் என்று தெரியவில்லை.
மேலும், ஹேமந்த் கார்கரே, காவல் துறைக் கூடுதல் ஆணையர் அசோக் காம்தே, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலேஸ்கர் ஆகிய மூன்று உயரதிகாரிகளும் விதிமுறைகளுக்குப் புறம்பாக ஒரே வாகனத்தில் சென்றது ஏன் என்பதும் தெரியவில்லை. எனவே, அவர்களது மரணத்தில் சந்தேகம் உள்ளது" என்றார் அந்துலே.
பா.ஜ.க. கடும் எதிர்ப்பு!
மூத்த அமைச்சர் அந்துலே கருத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள பா.ஜ.க., இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக விளக்கம் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
அமைச்சர் அந்துலேவின் கருத்துக்கள் தனிப்பட்டவையா அல்லது, மத்திய அமைச்சரவையுடையதா என்று பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என்று பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில் அமைச்சர் அந்துலேவின் கருத்துக்கள் மக்களவையில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்களைக் கண்டித்து சிவசேனா, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.