மீன்பிடி படகுகளுக்கு மத்திய அரசு மானியம் : அமைச்சர் தகவல்
புதன், 17 டிசம்பர் 2008 (18:16 IST)
மீனவர்களின் பாரம்பரிய படகினை இயந்திர படகாக மாற்றியமைப்பதற்கு ஒரு படகிற்கு ரூ.20 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படுவதாக நிதித்துறை இணை அமைச்சர் பவன்குமார் பன்சல் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் இன்று அளித்த பதிலில் அவர் இத்தகவலை தெரிவித்தார்.
மீன்படி தொழிலின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, கால்நடை வளம், பால்வளம் மற்றும் மீன்வளத் துறை மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதன் கீழ் பாரம்பரிய படகினை இயந்திர படகாக மாற்றியமைப்பதற்கு ஒரு படகிற்கு ரூ.20 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான செலவை மத்திய அரசும், தொடர்புடைய மாநில அரசும் சமமாக பகிர்ந்து கொள்கின்றன. யூனியன் பிரதேசங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தும் போது இதற்கான செலவு முழுவதையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்கிறது. இந்த மானியத் திட்டம் 8 எச்.பி முதல் 10 எச்.பி சக்தி வாய்ந்த படகு இயந்திரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
8 எச்.பி.க்கும் குறைவான சக்தியையுடைய இயந்திரங்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. இத்தகைய இயந்திரங்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க உதவாது. 20 மீட்டருக்கும் குறைவான ஒட்டுமொத்த நீளமுள்ள இயந்திர மீன்படி படகுகளுக்கு அதிவிரைவு டீசல் வாங்குவதற்கு ஒரு லிட்டருக்கு ரூ.1.50 வீதம் மானியம் அளிக்கப்படுகிறது. இந்த மானியத்திற்கான செலவினை மத்திய, மாநில அரசுகள் முறையே 80-20 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.