டெல்லி மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷீலா தீட்சித் 3ஆவது முறையாக இன்று முதல்வர் பதவியை ஏற்றார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஷீலா தீட்சித்திற்கும், ஏ.கே. வாலியா, அர்விந்தர் சிங் லவ்லி, ராஜ்குமார் செளகான், மன்கட் ராம் சிங்கால், முனைவர் கிரண் வாலியா உள்ளிட்ட 6 கேபினட் அமைச்சர்களுக்கும் துணை நிலை ஆளுநர் தஜேந்திர கன்னா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
முன்னதாக நேற்று அதிக இடங்களைப் பிடித்த தனிப்பெரும் கட்சியின் சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஷீலா தீட்சித், ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில் காங்கிரஸ் கட்சி 43 இடங்களில் வெற்றிபெற்றது. பாஜக 23 இடங்களில் வெற்றிபெற்றது.
காங்கிரஸ் கட்சி சார்பில் 3ஆவது முறையாக பதவியேற்ற ஒரே பெண் முதல்வர் என்ற பெருமையை ஷீலா தீட்சித் பெற்றுள்ளார்.
இதற்கிடையில், பா.ஜ.க. வின் சட்டமன்றத் தலைவராக வி.கே. மல்ஹோத்ரா இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.