கண்ணூரில் அரசியல் கட்சியினர் மோதல்: ஒருவர் பலி!
புதன், 17 டிசம்பர் 2008 (13:52 IST)
கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய மேம்பாட்டு முன்னணி மற்றும் சில அமைப்புக்களின் தொண்டர்கள் இடையே நடந்த கடும் மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 16 பேர் காயமடைந்தனர். இதில் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
கண்ணூர் மாவட்டத்தில் மட்டனூர் என்ற இடத்தில் பேருந்து ஒன்றில் பயணம் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களுக்கும், தேசிய மேம்பாட்டு முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகளின் தொண்டர்களுக்கும் இடையில் வாய்த் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து நடந்த மோதலில் பழாசி என்ற இடத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர் கே.பி.சஜீவன் (வயது 24) கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்டார். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
மேலும், தேசிய மேம்பாட்டு முன்னணியைச் சேர்ந்த உமர், நெளஃபெல், சம்சுதீன் ஆகியோர் உள்ளிட்ட 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கோழிக்கோடு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மோதல் நடந்த இடத்தில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில் மட்டனூர் பகுதியில் ஒரு நாள் முழு அடைப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.