அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் 3 மாநிலங்களில் வெற்றிபெற்றதன் மூலம் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் 25 தொகுதிகளில் போட்டியிட இப்போதே தயாராகி வருவதாகத் தெரிகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடிக் கட்சியுடன் கூட்டணி அமைத்து மதச்சார்பற்ற வாக்குகள் பிரிந்து விடாமல் இருக்கும் வகையில், தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுகள் தொடங்கியிருப்பதாக லக்னோவில் காங்கிரஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கவுரமான தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் கட்சி விரும்புவதாக உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ரீடா பகுகுணா ஜோஷி கூறினார்.
அண்மையில் நிறைவு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மற்றும் அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, 32 தொகுதிகளைத் தேர்வு செய்து, அவற்றில் 25ல் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளதாக அவர் கூறினார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு முடிந்து விட்டதாகக் கூறப்பட்ட நிலை மாறி தற்போது, முன்னேற்றமான நிலையை எட்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடிக் கட்சியின் நோக்கம் மதவாத சக்திகளை தோற்கடிப்பதே என்று கூறிய ஜோஷி, வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களை இரு கட்சிகளும் தேர்வு செய்யும் என்றார்.