மும்பை தாக்குதல்: கூகுள் நிறுவனம் மீது வழக்கு!
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (20:53 IST)
மும்பை மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தங்களின் இலக்குகளை அடையாளம் காண்பதற்கு Google Earth மென் பொருளைப் பயன்படுத்தியது தொடர்பாக, கூகுள் நிறுவனத்தின் மீது மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அமித் கர்கானி என்பவர் தொடர்ந்துள்ள இந்தப் பொது நல வழக்கில், "பாதுகாப்பிற்கு இது (Google Earth) அச்சுறுத்தல்" என்று கூறியுள்ளார். இந்தப் பொது நல வழக்கு வருகிற 18 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் அணு உலைகள், பாதுகாப்பு அமைப்புக்கள் உள்ளிட்ட முக்கிய- பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகும் அபாயம் அதிகமுள்ள இடங்களை Google Earth நிறுவனம் தனது மென் பொருளில் தடை செய்து மறைக்க வேண்டும் என்றும் அமித் கர்கானி கோரிக்கை விடுத்துள்ளார்.
நவம்பர் 26 ஆம் தேதி மும்பையின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், தங்களின் இலக்குகளைக் கணிப்பதற்கு Google Earth மென் பொருளைப் பயன்படுத்தியுள்ளனர் என்று, தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் புலனாய்வு அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவரிடம் கேட்டதற்கு, "பயங்கரவாத, வன்முறை நடவடிக்கைகளை கூகுள் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்திய மக்களுடன் நாங்கள் இணைந்து நின்று, தாக்குதல்களிலிருந்து மும்பை நகரவாழ் மக்கள் மீண்டுவர விரும்புகிறோம்.
Google Earth போன்ற மென் பொருட்கள் வர்த்தக அடிப்படையிலும், சேவை அடிப்படையிலும் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகின்றன. இயற்கைப் பேரிடர் நிவாரணப் பணிகள், காட்டுத் தீ மீட்புப் பணிகள், அவசரகால உதவிகள் ஆகியவற்றில் எங்கள் விவரங்கள் மிகவும் உதவுகின்றன.
இந்தியாவில் குஜராத் வெள்ள நிவாரணம், தென்னிந்தியாவில் சுனாமி நிவாரணம், மறுவாழ்வுப் பணிகள், காஷ்மீரில் பூகம்ப நிவாரணப் பணிகள் ஆகியவற்றில் Google Earth இன் பயன்பாடு குறிப்பிடத்தக்க வகையில் இருந்துள்ளது.
எனவே நாங்கள் எங்களின் மென் பொருட்கள் நல்ல முறையில் ஆக்கபூர்வப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். தவறான நடவடிக்கைகளுக்கு அவை பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொது அமைப்புக்கள் ஆகியவற்றுடன் பேச்சு நடத்த நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம்" என்றார்.