தேசியப் புலனாய்வு முகமை சட்டவரைவு மக்களவையில் தாக்கல்!
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (16:45 IST)
பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக தேசிய அளவிலான புலனாய்வு முகமை (National Investigating Agency (NIA)) ஒன்றை ஏற்படுத்துவதற்கான சட்டவரைவு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மக்களவையில் இன்று முறைசாராத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு, நலன்கள் 2008 சட்டவரைவின் மீதான விவாதத்திற்குப் பிறகு, தேசியப் புலனாய்வு முகமை சட்டவரைவை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சமர்ப்பித்தார்.
பயஙகரவாதத் தாக்குதல்கள், திட்டமிட்ட சதிச் செயல்கள் நமது நாட்டில் எங்கு நடந்தாலும், அவற்றை நேரடியாகத் தலையிட்டு விசாரிக்கும் அதிகாரத்தை கூட்டு முகமை (Federal Agency) ஒன்றிற்கு இந்தச் சட்டம் வழங்குகிறது.
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல்களின் எதிரொலியாக, பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்க கடுமையான சட்டரீதியான அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்று அரசு அறிவித்ததை அடுத்து, இந்தச் சட்டவரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.