பயங்கரவாதத்திற்கு எதிராக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க பிரதமர் வலியுறுத்தல்

சனி, 13 டிசம்பர் 2008 (14:07 IST)
பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதில் மாநில அரசுகளுக்கும் பங்கு உண்டு என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லியில் நீதித்துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய போது இதனைத் தெரிவித்த பிரதமர், அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என வலியுறுத்தினார்.

வளர்ந்து வரும் பயங்கரவாதமும், தீவிரவாதமும் நாட்டின் ஜனநாயகத்திற்கும், வளர்ச்சிக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருவது குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. எனவே மாநில அரசுகள், பிற மண்டல அரசுகள் அவற்றிற்கு எதிராக உறுதியான, விரைவான நடவடிக்கைகளை எடுப்பது தார்மீகக் கடமையாகும் என பிரதமர் கூறியுள்ளார்.

பயங்கரவாதத்தால் ஏற்படும் அச்சம் எப்படி ஒரு பிரிவினரை மட்டும் பாதிக்காதோ, அதேபோல் அதற்கு எதிராக ஒரு பிரிவினர் மட்டும் போராட வேண்டும் என்று கருத முடியாது.

உலகில் சுதந்திரமும், அமைதியும் நிலவ வேண்டும் என்று விரும்பும் ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

மும்பை தாக்குதலின் போது இந்தியாவுடன் ஒன்றாக நின்ற சர்வதேச சமூகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கூறிய பிரதமர், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் சேர்ந்து போராடுவோம் என நமது அண்டை நாடுகள் உட்பட பல்வேறு சர்வதேச நாடுக‌ளி‌ன் சார்பில் தமக்கு தொலைபேசி அழைப்புகளும், கடிதங்களும் வந்ததை குறிப்பிட்டார்.