5 மாநிலங்களில் நாளை வாக்கு வாக்கு எண்ணிக்கை!
ஞாயிறு, 7 டிசம்பர் 2008 (19:02 IST)
அண்மையில் நடந்து முடிந்த டெல்லி, மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது.
எல்லா மாநிலங்களிலும் பெரும்பாலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதால் நண்பகலில் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தல்களில் காங்கிரசிற்கும், பா.ஜ.க.விற்கும் இடையே கடும் போட்டி நிலவுயுள்ளது.
மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க. கடுமையாக முயற்சித்துள்ளது. டெல்லியிலும் மிசோரமிலும் ஆட்சியைப் பிடிக்கக் கடும் போட்டி நடத்தியுள்ளது.
நக்சலைட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சத்தீஷ்கரில் 90 தொகுதிகளுக்கு நவம்பர் 14, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.
மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கு நவம்பர் 27, டெல்லியில் 69 தொகுதிகளுக்கு நவம்பர் 29, மிசோரமில் 40 தொகுதிகளுக்கு டிசம்பர் 2, ராஜஸ்தானில் 200 தொகுதிகளுக்கு டிசம்பர் 4 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.