வி.பி.சிங் உடல் தகனம் செய்யப்பட்டது!
சனி, 29 நவம்பர் 2008 (19:39 IST)
மறைந்த முன்னாள் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று அலகாபாத்தில் தகனம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும், உறவினர்களும் கலங்கிய கண்களுடன் கலந்து கொண்டனர்.
தலைநகர் புது டெல்லியில் இருந்து நேற்று அலகாபாத் கொண்டு வரப்பட்ட வி.பி. சிங்கின் உடல், இன்று காலை 9.00 மணியளவில் அவரது 'ராஜா மண்டா கோதி' இல்லத்தில் இருந்து மூவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனத்தில் மூவண்ணக் கொடி போர்த்தி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இறுதி ஊர்வலம் இந்திரா காந்தி சந்திப்பு, காஃபி ஹவுஸ், சுபோத் சந்திப்பு, கமலா நேரு சாலை, மன்மோகன் பூங்கா, பல்கலைக்கழக சாலை, ஆனந்த பவன், பால்சன் சந்திப்பு, கோட்டை சாலை வழியாக சங்கம் இடுகாட்டை வந்தடைந்தது.
அங்கு இந்திய இராணுவத்தினரின் இரண்டு படைப் பிரிவினர் வி.பி.சிங்கின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். பீகார் மாநில இராணுவ இசை அணியினர் இரங்கல் கீதம் இசைத்தனர்.
பண்டிட் அஞ்சனி குமார் வேதம் ஓதினார். அப்போது வி.பி.சிங்கின் உடலுக்கு அவரது மூத்த மகன் அஜேயா சிங் எரியூட்டினார்.
சுற்றியிருந்த அனைவரும் வி.பி.சிங் நினைவுகள் நீண்ட காலம் வாழும் என்றும் விண்ணும் மண்ணும் இருக்கும் வரை அவர் நம் நினைவுகளில் வாழ்வார் என்றும் வாழ்த்தினர்.
மத்திய அமைச்சர்கள் ரகுவன்ஸ் பிரசாத் சிங், ராம் விலாஸ் பாஸ்வான், சுபோத் கான்ட் சஹாய், மாநிலக் காங்கிரஸ் தலைவர் ரீட்டா பஹூகுனா ஜோஷி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் இறுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.