அந்நிய சக்திகளுக்கு பிரதமர் எச்சரிக்கை!

வியாழன், 27 நவம்பர் 2008 (21:48 IST)
மும்பையில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பின்னால் அந்நிய சக்திகளுக்குத் தொடர்பு இருப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.

இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடும் அண்டை நாடுகளின் செயலை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொண்டிருக்காது என்று பிரதமர் ஆற்றிய உரையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மும்பையில் ஹோட்டல்கள், ரயில் நிலையங்கள் உட்பட 11 இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், கடுமையான தொனியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றினார்.

இந்தியாவிற்கு வெளியே செயல்படும் எந்த பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது என்பதற்கு உரிய ஆதாரம் உள்ளதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

நாட்டின் வர்த்தக தலைநகரை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கூறிய அவர், அண்டை நாடுகளில் தங்கள் இருப்பிடத்தைக் கொண்டு செயல்படும் இதுபோன்ற சக்திகளை வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டார்.

மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை ஒருபோதும் இந்தியா பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், இந்தியா அடைந்த இழப்பிற்கு அவர்கள் விலை கொடுத்தே ஆக வேண்டும் என்றும் பிரதமர் எச்சரித்துள்ளார்.

வெளிநாட்டினர் மற்றும் உயர் பதவி வகிப்போரைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் திட்டமிட்டு, வெளிநாட்டுத் தொடர்புடன் நடத்தப்பட்டிருப்பதற்கும் பிரதமர் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே மும்பையில் தாஜ் நட்சத்திர விடுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன், அங்கு தங்கியிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன்.

வெப்துனியாவைப் படிக்கவும்