மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்தி இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற வழிசெய்த முன்னாள் பிரதமர் சமூக நீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங் காலமானார்.
சுதந்திர இந்தியாவின் அரசியல் போக்கில் ஜெயப்பிரகாஷ் நாராயணனிற்குப் பிறகு, ஒரு பெரும் மாற்றத்தை கொண்டுவந்த வி.பி. சிங், கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவுற்று டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 77. வி.பி.சிங்கிற்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நம்பிக்கையைப் பெற்றவரான வி.பி.சிங், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும், முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், பிறகு பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
போபர்ஸ் பீரங்கி பேரம், ஹெச்.டி.டபுள்யூ நீர்முழ்கிக் கப்பல் வாங்கியது, ஃபேர்பாக்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது போன்ற பிரச்சனைகளால் இராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து அமைச்சரவையில் இருந்தும், காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகிய வி.பி. சிங், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகிவிட்டு அலகாபாத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
காங்கிரஸில் இருந்து வெளியேறிய வி.பி. சிங், ஜன் மோர்ச்சா (மக்கள் முன்னனி) என்ற கட்சியைத் துவக்கினார். காங்கிரஸிற்கு எதிராக, மதவாத சக்திகளுக்கு மாற்றாக நாடு தழுவிய ஒரு கட்சியை துவக்க திட்டமிட்ட வி.பி.சிங், அவசர நிலை காலத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கையாண்ட அதே வழிமுறையை கையாண்டார். சிதறிக் கிடந்த ஜனதாக் கட்சியினரையும், தமிழ்நாட்டில் வலிமையான சக்தியாக இருந்த பழைய காங்கிரஸ் தொண்டர்களையும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் சக்திகளாகத் திகழ்ந்த லாலு பிரசாத், ராம் விலாஸ் பாஸ்வான், இரா.செழியன், முலாயம் சிங் யாதவ், செளத்திரி தேவி லால், எஸ்.ஆர். பொம்மை, இராமகிருஷ்ண ஹெக்டே, தேவே கவுடா, ஜார்ஜ் பெர்ணான்டஸ் தலைமையில் இயங்கிவந்த சோசலிஸ்ட் கட்சியினர் என்று நாடு தழுவிய அளவில் ஒன்றிணைத்து ஜனதா தள் (மக்கள் தளம்) என்றக் கட்சியைத் தோற்றுவித்தார் வி.பி. சிங். 1989ஆம் ஆண்டு நடந்த மக்களைவைத் தேர்தலில் ஒரு பக்கம் பா.ஜ.க.வுடனும்(தொகுதிப் பங்கீடு அடிப்படையில்), மறுபக்கம் தி.மு.க. தெலுங்கு தேசம், அசோம் கன பரிஷத், அகாலி தள், தேசிய மாநாடு போன்ற மத்திய ஜனநாயக சக்திகளுடனும், இடதுசாரிகளுடனும் கூட்டணி அமைத்து காங்கிரஸை வீழ்த்தினார்.
காங்கிரஸின் பலமாகத் திகழ்ந்த இந்தியாவின் இரண்டு பெரும் மாநிலங்களில் (உ.பி.,பீகார்) கடுமையாக பிரச்சாரம் செய்து அக்கட்சியை முழுமையாக தொற்கடித்தார். 83 தொகுதிகள் கொண்ட உ.பி.யிலும், 54 தொகுதிகள் கொண்ட பீகாரிலும் காங்கிரஸ் கட்சிக்கு 5-6 இடங்கள் மட்டுமே கிடைத்தது.
1984ஆம் ஆண்டுத் தேர்தலில் 405 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, 1989 மக்களவைத் தேர்தலில் (தென்னகத்தில் பெற்ற பெரு வெற்றியால்) 195 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. பின்னாளில் பிரதமரான சந்திரசேகரின் எதி்ர்ப்பையும் தாண்டி பிரதமரானார் வி.பி.சிங். நாடாளுமன்றத்திற்குள் காங்கிரஸின் வலிமையான எதிர்ப்பை மிகச் சாதாரணமாக எதிர்கொண்ட வி.பி.சிங், ஒரு திறமையான நிர்வாகத்தை நாட்டிற்கு அளித்தார்.
மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த நீதிபதி பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் குழு அளித்த அறிக்கையை ஏற்று, மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் ஆணையை வெளியிட்டார்.
இதனை எதிர்த்து காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகள் எதிர்த்தன. ஜனதா தளத்திற்குள்ளேயே வி.பி.சிங்கை கடுமையாக எதிர்த்துவந்த சந்திரசேகருக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க, வி.பி. சிங் அமைச்சரவை நம்பிக்கைத் தீர்மானத்தில் தோற்றது. பதவியிழந்த வி.பி.சிங், சமூக நீதிக் காவலர் என்று போற்றப்பட்டார்.
அதன்பிறகும் தீவிர அரசியலில் ஈடுபட்டுவந்த வி.பி.சிங், பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பையில் நடந்த மதக் கலவரத்தை நிறுத்த தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தார். இதனால் அவரது உடல் நிலை, குறிப்பாக சிறு நீரகங்கள் பாதிக்கப்பட்டது. கலவரம் நின்றது, ஆனால் வி.பி.சிங்கின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.
தன்னால் செயல்பட முடியாது என்ற நிலையை உணர்ந்த வி.பி.சிங், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். ஜனதா தளம் வலிமையிழந்தது.
நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் பெற்றாலும், அவரால் முன்பைப்போல வேகமாக செயல்பட முடியாத நிலையிலும், டெல்லியில் உள்ள குடிசை வாசிகளின் உரிமைகளுக்காக களத்தில் இரங்கிப் போராடினார்.
தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும், பெரியார் மீதும் பெரும் பற்றுக்கொண்டிருந்த வி.பி.சிங், கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது, சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதியை ஆதரித்து நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். தாங்கள் மிகவும் நேசித்த அந்தத் தலைவனின் குரலை அன்றுதான் தமிழக மக்கள் கடைசியாக கேட்டனர்.