மும்பை தாக்குதல்கள்: நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!
வியாழன், 27 நவம்பர் 2008 (16:58 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் 100 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதை அடுத்து, நமது நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.
தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருவதுடன், விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்களை முழுமையாகப் பெற்றுப் பதிவு செய்யும்படி விடுதி உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் சட்டப் பேரவைத் தேர்தல் சனிக்கிழமை நடப்பதையொட்டி அங்கு கண்காணிப்பு அதிகரிப்பட்டுள்ளது. டெல்லி மாநில எல்லைகள் முழுவதும் சீல் வைக்கப்பட்டு தீவிர வாகனச் சோதனை நடந்து வருகிறது.
தமிழகத்திலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மாநிலக் காவல்துறைத் தலைவர் கே.பி. ஜெயின் தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்றிரவு மாநிலக் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நட்சத்திர விடுதிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தீவிரக் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.