பயங்கரவாதிகளுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும்: ஜெய்ஸ்வால்!
வியாழன், 27 நவம்பர் 2008 (16:01 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களை ஒரு போர் என்று கூறியுள்ள மத்திய அரசு, இதில் பயங்கரவாதிகளுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்துத் தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால், "மும்பையில் நடந்துள்ள பயங்கரவாதத் தாக்குதல்களை ஒரு போர் என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே இதில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது." என்றார்.
இந்தச் சம்பவத்தின் முழுப் பின்னணியையும் அறிந்துகொள்ளவும், இதில் ஈடுபட்டுள்ள பயங்கரவாதிகளைக் கைது செய்யவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற ஜெய்ஸ்வால், "பயங்கரவாதிகளுக்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறோம்" என்றார்.
"நேற்று இரவு முதல் பிரதமர் மன்மோகன் சிங் மும்பை சம்பவங்களை தொடர்ந்து கவனித்து வருகிறார். மராட்டிய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்- உடன் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்" என்ற ஜெய்ஸ்வால், "மும்பையில் காவலர்களுக்கு உதவியாக மேற்கொண்டு கூடுதல் படைகளை அனுப்பவும் உத்தேசிக்கப்பட்டு வருகிறது" என்றார்.
மும்பையில் இன்னும் சில இடங்களில் மோதல்கள் நீடித்து வருவதைக் குறிப்பிட்ட அவர், எல்லா மோதல்களும் கூடிய விரைவில் முடிந்து விடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.