டிசம்பர் 24க்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை குறையும்: முரளி தியோரா!
செவ்வாய், 25 நவம்பர் 2008 (17:36 IST)
ஆறு மாநில சட்டப் பேரவைத் தேர்தல் பணிகள் முடிந்தவுடன், டிசம்பர் 24ஆம் தேதிக்குப் பிறகு வேண்டுமானால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளைக் குறைப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யக்கூடும் என்று பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 50 டாலர்களுக்கும் கீழ் குறைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளைக் குறைக்காதது ஏன் என்று இடதுசாரிகள், பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ளன.
கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 147 டாலருக்கும் மேல் இருந்தபோது 10 விழுக்காடு வரை உயர்த்தப்பட்ட எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி டிசம்பர் 2 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று இடதுசாரிகள், தெலுங்குதேசம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் உள்ள மூன்றாவது அணி அறிவித்துள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, "கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. நாங்கள் கண்டிப்பாக எரிபொருட்களின் விலைகளைக் குறைக்க வேண்டும். ஆனால் 6 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடந்து வருவதால் தேர்தல் நடத்தை விதிகளைக் கருதி டிசம்பர் 24 ஆம் தேதிக்கு முன்பு நாங்கள் முடிவெடுக்க முடியாது." என்றார்.