100% மேல் வாக்குப்பதிவு: ராய்ப்பூரில் 4 தேர்தல் அதிகாரிகள் நீக்கம்!

சனி, 22 நவம்பர் 2008 (13:01 IST)
சத்தீஷ்கரின் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்தில் 100% மேல் வாக்குப்பதிவு நடைபெற்றதால், அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 4 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அம்மாவட்டத்தின் அஃபன்பூர் தொகுதியில் உள்ள மணிக்சௌவ்ரி கிராமத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 478. ஆனால் கடந்த நவம்பர் 20ஆம் தேதி அம்மாநிலத்தில் 2ம் கட்டமாக நடந்த தேர்தலின் போது இங்கு நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் 510 வாக்குகள் பதிவாகியுள்ளன.

மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட, பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ததுடன், அங்கு மீண்டும் தேர்தல் நடத்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஃபன்பூர் தொகுதியில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரான தர்மேந்திர சாஹு, ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினர் சந்திரசேகர் சாஹுவை எதிர்த்துப் போட்டியிடுகிறார். மணிக்சௌவ்ரி, சந்திரசேகர் சாஹுவின் மூதாதையர் வசித்த கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்