இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகள் அவசியம் : அமைச்சர் கமல்நாத்!

புதன், 19 நவம்பர் 2008 (04:45 IST)
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகள் மிகவும் அவசியம் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் கமல்நாத் கூறியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் சர்வதேச மேம்பாட்டு துறை அமைச்சர் டக்லஸ் அலெக்சாண்டரை சந்தித்து பேசும் போது கமல்நாத் இக்கருத்தை வெளியிட்டார்.

இந்தியாவில் மிக அதிக அளவில் முதலீடு செய்ய இங்கிலாந்து நாட்டு தொழில் அதிபர்களுக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்த கமல்நாத், இந்தியாவில் பொதுத் துறை மற்றும் தனியார் துறை ஆகியவை இணைந்து மிக அதிக அளவில் திட்டங்களை நிறைவேற்ற ஆர்வத்தை உருவாக்க வேண்டியது அவசியம் என்றார்.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நிலைமை நெருக்கடி குறித்தும் அதனால் வர்த்தகத்திற்கு ஏற்பட்ட தாக்கம் குறித்தும் இருதரப்பு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இக்கூட்டத்தில் வர்த்தகத் துறை செயலர் ஜி.ே. பிள்ளை உட்பட இருநாடுகளின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

உலக வர்த்தக அமைப்பு தோஹா சுற்று பேச்சு வார்த்தைகள் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டியது குறித்து இருதரப்பு தலைவர்களும் உரையாடினார். நியாயமான சர்வதேச வர்த்தகம் உருவாக்க வேண்டும் என்றும், இதில் வெளிப்படையான தன்மை இருக்க வேண்டும் என்றும் இந்தியா விரும்புவதாக கமல்நாத் தெரிவித்தார்.

இதுபோன்ற வர்த்தகத்திற்கு வளர்ந்த நாடுகள் தேவையான அளவு விட்டு கொடுக்கும் தன்மையை கடைப்பிடிக்குமா என்பது தான் தோஹா சுற்று பேச்சு வார்த்தையில் முக்கியமானதாக இருக்கும் என்று தெரிவித்த கம‌ல்நா‌த், சர்வதேச வர்த்தக அமைப்பின் மற்ற நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பு வைத்து கொண்டிருப்பதாலும் வளர்ந்த நாடுகள் இந்தியாவின் கருத்தை ஏற்றுக் கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

உலக வர்த்தக அமைப்பில் உள்ள பல நாடுகளின் மேம்பாட்டு வளர்ச்சிக்கான தேவைகளையும் மற்றும் சந்தை நிலைமையையும் கருத்தில் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் அந்த அமைப்பில் உள்ள அனைத்து நாடுகள் செயல்படுவது தான் இந்த அமைப்பு தொடங்கிய பேச்சு வார்த்தையின் முடிவாக இருக்கும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.

இந்திய-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கு சிறந்த அளவில் வாய்ப்புகள் இருப்பதாக இருதரப்பு தலைவர்களும் தெரிவித்தனர். ஏனெனில் வெகுகாலமாக இருநாடுகளுக்கு இடையே நல்ல உறவு நீடிப்பதாக அவர்கள் கூறினர். விவசாயம், சுகாதாரம், கட்டமைப்பு வசதிகள், உயர் தொழில்நுட்பம், சட்டம் போன்ற பல துறைகளில் முதலீடுகளையும் வர்த்தகத்தையும் மேம்படுத்த முடியும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்