உல்ஃபா உள்ளிட்ட மூன்று இயக்கங்களின் மீதான தடை நீட்டிப்பு!
வியாழன், 13 நவம்பர் 2008 (03:35 IST)
உல்ஃபா உள்ளிட்ட மூன்று தீவிரவாத இயக்கங்கள் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் புதன்கிழமை நடந்த பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உல்ஃபா, போடோலேண்ட் தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.எஃப்.பி), ஹைநியூடிரெப் தேசிய விடுதலைக் கழகம் (எச்.என்.எல்.சி.) ஆகிய மூன்று இயக்கங்களின் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உல்ஃபா இயக்கத்தின் மீது 1990 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை விதிக்கப்பட்ட தடை நவம்பர் 26 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதேபோல என்.டி.எஃப்.பி இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நவம்பர் 22 ஆம் தேதியுடனும், எச்.என்.எல்.சி. மீதான தடை நவம்பர் 15 ஆம் தேதியுடனும் முடிவடைகிறது.
அஸ்ஸாமில் 84 பேர் பலியாகக் காரணமான அக்டோபர் 30 தொடர் குண்டு வெடிப்புகளில் உல்ஃபா, என்.டி.எஃப்.பி. இயக்கங்களுக்குத் தொடர்பிருக்கக் கூடும் என்று கருதப்படும் நிலையில், அந்த இயக்கங்களின் மீது கண்காணிப்பை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.