காங்கிரஸ் முக்கியப் பொறுப்புக்களில் இருந்து மார்கரெட் ஆல்வா நீக்கம்!
வியாழன், 13 நவம்பர் 2008 (00:45 IST)
கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதற்காக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, தேர்தல் குழு ஆகியவற்றின் உறுப்பினர் பொறுப்புக்களில் இருந்து மார்கரெட் ஆல்வா நீக்கப்பட்டுள்ளார். மேலும், கட்சியின் பொதுச் செயலர் பதவியில் இருந்து விலகும் பொருட்டு அவர் அனுப்பிய பதவி விலகல் கடிதமும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கர்நாடகச் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சீட்டுகள் பணத்திற்கு விற்கப்பட்டுள்ளன என்று குற்றம்சாற்றிய மார்கரெட் ஆல்வா, தான் வகித்து வந்த பொதுச் செயலர் பதவியை விட்டு விலகுவதாக கட்சியின் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இதை ஏற்றுக்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை, செயற்குழு, தேர்தல் குழு ஆகியவற்றில் இருந்தும் மார்கரெட் ஆல்வாவை நீக்குவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்துத் தலைநகர் டெல்லியில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் சத்யவிரட் சதுர்வேதி, "ஆல்வா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியுள்ளார். கட்சியின் உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் உட்பட யாராக இருந்தாலும் கட்டுப்பாட்டை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை கடுமையாக இருக்கும்" என்றார்.
இந்நடவடிக்கை ஒழுக்கக்கேட்டிற்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை என்று கூறியுள்ள மற்றொரு பேச்சாளர் ஜெயந்தி நடராஜன், கட்சியின் எல்லாத் தலைவர்களும் தொண்டர்களும் கட்சிக் கட்டுப்பாட்டை மதிக்க வேண்டும் என்றார்.
மராட்டியம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாநிலங்களின் கட்சி விவகாரங்களுக்கு ஆல்வா பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.