மாலேகான் : மும்பையில் சிபிஐ அதிகாரி விசாரணை

சனி, 8 நவம்பர் 2008 (10:16 IST)
மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் மகாராஷ்டிர மாநில பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரிகளை, மத்திய புலனாய்வுக் கழக (சிபிஐ) உயர் அதிகாரி ஒருவர் மும்பையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள ராணுவ அதிகாரி புரோஹித் தன் மீதான குற்றச்சாற்றை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், சிபிஐ அதிகாரியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இணை இயக்குனர் நிலையிலான சிபிஐ அதிகாரி மும்பையில், வெள்ளிக்கிழமை முழுவதும் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினருடன் இருந்து ஆலோசனை நடத்தியதாக அதிகாரிகளை மேற்கோள்காடி பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.

மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிலரையும் சிபிஐ அதிகாரி சந்தித்ததாகவும் அந்த தகவல் கூறுகிறது.

சாது ஒருவரும், ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும், தற்பொழுது ராணுவத்தில் பணியாறறிவரும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் உட்பட இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான புரோஹித் வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே மேலும் சில ராணுவ அதிகாரிகளுக்கும் மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாகவும், அவர்களிடமும் விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலேகானில் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்