'மலேகான் குண்டு வெடிப்புகளுக்கு திட்டமிட்டேன்' : ராணுவ அதிகாரி ஒப்புதல்!
வெள்ளி, 7 நவம்பர் 2008 (12:58 IST)
மராட்டிய மாநிலம் மலேகானில் நடந்த குண்டு வெடிப்புகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கலோனல் ஸ்ரீகந்த் பிரசாத் புரோஹித் (வயது 37), இந்தச் சதி தனது தலைமையில்தான் திட்டமிடப்பட்டது என்று ஒப்புக்கொண்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.
மலேகானில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தும் சதியைத் திட்டமிட்டதுடன், மற்ற குற்றவாளிகளுக்கு ஆர்.டி.எக்ஸ் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொடுத்ததையும் புரோஹித் ஒப்புக்கொண்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேகான் குண்டு வெடிப்புகள் தொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கலோனல் சைலேஷ் ராய்காரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்த பயங்கரவாதத் தடுப்புப் படையினர் முடிவு செய்துள்ளனர்.
சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள இவரும், ராணுவ அதிகாரி புரோஹித்தும் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் என்று தகவல்கள் தெரிவிப்பதான சி.என்.என்.- ஐ.பி.என். தொலைக்காட்சி கூறுகிறது.
முன்னதாக, மலேகான் குண்டு வெடிப்புகளில் புரோஹித்திற்கு நேரடித் தொடர்பு உள்ளது என்றும், மற்ற குற்றவாளிகளுக்கு அவர் குறைந்தது 4 ஆயுதங்களைக் கொடுத்துள்ளார் என்றும் நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புரோஹித்தின் வங்கிக் கணக்கில் ஏராளமான பணப்பறிமாற்றம் முறைகேடாக நடந்துள்ளதால், அவருக்கு மூளையை ஆராய்ந்து உண்மை அறியும் சோதனை, மயங்கிய நிலையில் உண்மை அறியும் சோதனை ஆகியவை உள்ளிட்ட சோதனைகளை நடத்த காவல்துறையினர் அனுமதி கோரினர்.
கடந்த வியாழக்கிழமை இதற்கு நாசிக் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
மேலும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாத்வி பிரக்யா சிங் தாகூரிடம் மேலும் சில அறிவியல் சோதனைகளை நடத்த காவல்துறையினர் அனுமதி கேட்டுள்ளனர்.