பிபிஓ பணிகள் பாதிக்கப்படாது - ப. சிதம்பரம்!

வியாழன், 6 நவம்பர் 2008 (02:24 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பராக் ஒபாமா, வெளியில் கொடுத்து முடிக்கப்படும் பணி முறை (பி.பி.ஓ.) கட்டுப்படுத்தப்படும் என்று ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தார்.

தற்போது அவர் அதிபராக பதவியேற்கவிருக்கும் நிலையில் பிபிஓ துறை பாதிப்புக்குள்ளாகும் என்ற கருத்து நிலவுகிறது.

ஆனால் இதற்குப் பதிலளிக்கும் வகையில் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில், இதுபோன்ற இங்கும் அங்குமான கருத்து பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை என்றும், ஒபாமா பதவி ஏற்றவுடன் இது ஒருங்கிணைக்கப்பட்ட உலகம் என்பதையும், நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து கொள்வார் என்றும் கூறினார்.

அமெரிக்காவைப் பொருத்தவரை உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடு என்று கூறிய நிதியமைச்சர், அதேபோல் இந்தியாவும் சுதந்திரமான மிகப்பெரிய ஜனநாயக சந்தைப் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கிறது என்றார். எனவே இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறிய அவர், அமெரிக்காவில் புதிய நிர்வாகத்தின் கீழ் இந்திய-அமெரிக்க உறவுகள் தொடர்ந்து மேம்பட வேண்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்