சுதந்திர போராட்ட வீரரும், மிகச் சிறந்த கல்வியாளரும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மௌலான அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான நவம்பர் 11ஆம் தேதி தேசிய கல்வித் தினமாக கொண்டாடப்படவுள்ளது.
இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட மௌலான ஆசாத்தின் நினைவினைப் போற்றும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தேசிய கல்வித் தினத்தை நாடெங்கிலும் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது. இதனையொட்டி அன்று கல்வி நிறுவனங்களில் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கருத்தரங்குகள், பணிமனைகள், பேரணிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 11ஆம் தேதியன்று புது டெல்லி விக்யான் பவனில் நடைபெறும் துவக்க விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். விழாவுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங் தலைமை வகிக்கிறார்.
நவீன கல்வியின் சிற்பியும், நாட்டின் தலைசிறந்த குடிமகனுமான மௌலான ஆசாத் நினைவாக சிறப்பு அஞ்சல் உறை ஒன்றும் விழாவில் வெளியிடப்படவுள்ளது. இந்திய தேசிய நூல் அறக்கட்டளை அவரைப் பற்றி வெளியிட்டுள்ள நூல்களின் திரட்டும் அன்று வெளியிடப்படும். மௌலானா ஆசாத் தொடர்பாக புகைப்பட கண்காட்சி ஒன்றுக்கும் விக்யான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் மாநில மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், மத்திய கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், சிறந்த கல்வியாளர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
இதைப் போல பல நிகழ்வுகள் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நவம்பர் 11 அன்று நடைபெறவுள்ளன. தேர்தல் ஆணையம் இந்த விழாவில் அரசியல் தொடர்பான உரைகள் இடம் பெறக்கூடாது என்ற நிபந்தனையுடன் இந்த நிகழ்வுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.