இலங்கை தமிழர் உரிமை: டி.ஆர். பாலு கோரிக்கை!

புதன், 5 நவம்பர் 2008 (05:06 IST)
இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க, புதுடெல்லி வரவிருக்கும் அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவிடம், மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்தார்.

டெல்லியில் "பீம்ஸ்டெக்'' எனப்படும் 7 தெற்காசிய மண்டல நாடுகளின் தலைவர்களின் மாநாடு வரும் 13ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே புதுடெல்லி வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியையும் மத்திய கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு சந்தித்து பேசினார்.

அப்போது, ராஜபக்சேயிடம், இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும் என டி.ஆர். பாலு கேட்டுக் கொண்டதாக மத்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்கக் கூடாது என்றும் ராஜபக்சேயிடம் வற்புறுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்